எங்களைப் பற்றி
கடந்த பல தசாப்த காலமாக ஈழத்தமிழ் மண்ணில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக ஈழத்தமிழர்களாகிய நாம் பயங்கரமான இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களானோம். அதுமட்டுமல்லாது தமது வாழ்வாதாரமும் குடும்பமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி சிதறிப் போயின. முடிவில்லா துயரங்களுக்கு மத்தியில் எமது இருப்பைக் கேள்விக் குறியாகிய போது நாம் திசைமாறிய பறவைகளாக அபயம் என உலகின் பல பாகங்களுக்கும் சிதறி அடிக்கப்பட்டோம்.
பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர் எனவும் அக்காவைப் பிரிந்த தங்கை எனவும் அண்ணனை பிரிந்த தம்பி எனவும் நமது குடும்பக் கட்டமைப்பு சூனியமாக்கப்பட்டது. இதன் பின்விளைவாக நமது ஈழத்தமிழ் மண்ணில் பல முதியவர்கள் நிர்கதியாக்கப்பட்டனர். இவ்வாறு தனிமையாக்கப்பட்ட எமது குடும்ப உயிர் நாடியாக விளங்கும் முதியவர்கள் தொகை அதிகமாகக் காணப்படுகின்றது. முதுமையடைந்து நிற்கதியாக தன்னந்தனியாக அனுபவிக்கும் துயரங்களை கண்டு மனம் நொந்த உள்ளங்கள் பற்பல. அப்படியான பல நல்ல உள்ளங்களின் எண்ணக் கருவில் தோன்றியதுதான் வல்வை முதியோர் இல்லம்.
“மக்கள் சேவையே மகேசன் சேவை” எனும் நோக்குடன் தள்ளாத வயதில் தத்தளிப்பவர்களைப் பாதுகாத்து ஆதரித்து அவர்களது வாழ்வை ஒளிமயமாக்கி மனநிம்மதியை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு “நன்றே செய் அதை இன்றே செய்” எனும் கூற்றுக்கு இணங்க துரிதமாக செயல்பட்டு பல இடையூறுகளுக்கு மத்தியில் பெண்களுக்கான வல்வை முதியோர் இல்லம் 24/04/2017 ம் நாள் தனியான இல்லத்திலும் ஆண்களுக்கான முதியோர் இல்லம் பிறிதொரு தனியான இல்லத்தில் 24/04/2019 ம் நாள் ஊரிக்காடு, வல்வெட்டித்துறையில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கின்றது.
இல்லத்தின் தொலைநோக்கு பின்வரும் மூன்று கட்டளையின் அடிப்படையில் அடங்கும்.
1) வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் அருட் கடாட்சத்தை வேண்டியும் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் கொள்கைகளையும் தத்துவங்களையும் பின்பற்றி ஆன்மீக ஈடேற்றத்திற்காக நடாத்தப்படும் இல்லமாகும்.
2) இல்லம் வர்த்தக நோக்கமற்ற இலாபம் கருதாது இயங்கும் நிறுவனமாகும்.
3) பிள்ளைகளாலும் உறவினர்களாலும் உடன் இருந்து பராமரிக்க முடியாத, தமது தேவைகளை தானே செய்து கொள்ள முடியாத முதியோர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நலன்களைப் பேணி, தேவைகளை பூர்த்தி செய்து அவர்களைப் போன்ற மற்றைர்களுடன் ஒன்றாக வாழவதற்காக நடாத்தப்படும் இல்லமாகும்.
இல்லத்தின் சேவையை பெற்று பயன் அடைய விரும்புவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளவும். மற்றும் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றோம்.